கற்களை வீசி தாக்கிய உள்ளூர்வாசிகள்.. பரத் பட ஷூட்டிங்கில் பரபரப்பு.. நடந்தது என்ன?

தாய்லாந்தில் பரத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது உள்ளூர்வாசிகள் கற்களை எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள டாம் லுங் என்ற குகையில் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணி அவரது பயிற்சியாளருடன் சிக்கிக்கொண்டது.

அதன் பின்னர் அவர்கள் ஒன்பது நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்புபடையினரால் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியானது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து, மலையாளத்தில்  ‘ ஆக்சன் 22’ என்ற படம் தயாராகிறது

தயாரிப்பாளர் சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில்  தமிழில்  ‘ எம் -டன் மகன்’ ‘காதல்’  ‘555’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பரத் நடிக்கிறார்

உண்மை சம்பவம் என்பதால், சம்பவம் நடந்த இடத்திலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட படக்குழு அதற்காக தாய்லாந்து சென்றது.

தொடர்ந்து அரசு அனுமதியுடன் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது.அதற்காக விலையுயர்ந்த கார்கள் கொண்டுவரப்பட்டன.

அப்போது அங்கு வந்த உள்ளூர் காரர்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால், தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டு கொண்டுவரப்பட்டிருந்த கார்களின் பெயிண்டை சுரண்டியும், அதன் மீது கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்கள் கேட்டப்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஷூட்டிங் தொடங்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் மழை காரணமாக மீண்டும் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என அந்தப்படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்ததால் படக்குழு இந்தியா திரும்புகிறது.